******************** கடம்பூர் கோயில்: 2019

Monday, March 25, 2019

முசிறியம் சிவன்கோயில் Musiriyam sivan temple

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் முசிறியம் சிவன்கோயில்

கொரடாச்சேரியில் இருந்து பாண்டவை ஆற்றின் கரையில் கண்கொடுத்த வனிதம் செல்லும் வழியில் நான்கு கிமி தூரத்தில் உள்ளது முசிறியம் கிராமம்.

இங்கு தொடக்கப்பள்ளி அருகில் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது சிவன் கோயிலும் அருகே பெருமாள் கோயிலும்.

பழம்கோயில் சிதைந்த பின்னர் எழுப்பப்பட்டுள்ள சிறிய கோயில் இதுவாகும். கிழக்கு நோக்கிய பெரிய லிங்கம் பெயர் அறிய இயலவில்லை, அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார் இறைவன் கருவறை வாயிலில் சிறிய விநாயகர், மற்றும் முருகன் உள்ளனர். சற்று எதிரில் பைரவரும் சூரியனும் உள்ளனர். நவகிரகங்கள் உள்ளன. ஓர் ஆஞ்சநேயரும் சிவாலயத்தில் உள்ளது.

இறைவன் இறைவி இரு கருவறையையும் இணைக்கிறது ஓர் கான்கிரீட் மண்டபம் இம்மண்டபத்திலேயே ஓர் கிணறும் உள்ளது. கோயிலுக்கு தென்புறம் ஒரு சிறிய குளமும் உள்ளது.

ஆகமவிதிப்படி அமைக்கப்பட்ட கோயில் என தோன்றவில்லை, எனினும் இறைவன் இதையெல்லாம் தாண்டி அன்பாக தம்மை வணங்கவரும் பக்தர்களை காண அனைத்து நெறிமுறைகளையும் தாண்டி வரவேற்க காத்திருக்கிறார்.

#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்.

Sunday, March 24, 2019

Nalil onnu sivan temple- நாலில்ஒன்னு சிவன்கோயில்

ஆன்மாக்கள் பல கோடிப் பிறவிகளில் சேர்த்து வந்துள்ள கர்மங்களை முழுவதுமாய் களைந்து, மீண்டும் பிறவாத நிலையை அடைவது 'முக்தி' என்று குறிக்கப் படுகிறது.
முக்தி வகைகள் நான்கு என்று புராணங்கள் பறை சாற்றுகிறது. சாலோக்கியம், சாயுச்சியம், சாமீப்பியம், சாரூப்பியம்.
சாலோக்கியம்: இறைவனின் உலகத்தை அடைந்து தொண்டு செய்தல்.
சாமீப்பியம்: இறைவனின் உலகத்தை அடைவதோடு அல்லாமல், அருகாமையில் இருந்து தொண்டாற்றும் பேறு.
சாரூப்பியம்: உபாசிக்கும் இறை வடிவத்தின் திருவுருவத்தையும் இறைச் சின்னங்களையும் பெற்று, இறைவனுக்கு தொண்டு செய்தல். (சில உதாரணங்கள்: திரிசூலம், சங்கு, சக்கரம், சக்தி வேல், நெற்றிக் கண்கள்).
சாயுச்சியம்: இறைவனோடு ஒன்று படுதல். ஜீவாத்ம - பரமாத்ம ஐக்கிய நிலையை குறிப்பது
இதோ கொரடாச்சேரி அருகில் உள்ள நாலில்ஒன்னு சிவனை தரிசிக்க முடிந்தோர்க்கு இந்த நாலில்ஒன்று கிடைக்கும். இதுவே ஊரின் பெயராகவும் ஆனது.
கொரடாச்சேரியில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் வெண்ணாறு கரையில் கண்கொடுத்த வனிதம் சாலையில் இரண்டு கிமி தூரம் சென்றால் நாலில்ஒன்று கிராமத்தினை அடையலாம். சிறிய அழகான பசுமை போர்வை போர்த்திய வயல்களும், தெங்கு மரங்களும் நிறைந்த கிராமம். இங்கு கிழக்கு நோக்கிய சிவாலயம் அமைந்துள்ளது.
முற்காலத்தில் அழகிய சிவாலயமாக இருந்த இக் கைலாசநாதர் கோயில் இடைக்காலத்தில் சிதைந்து போயிருந்ததை சிரமங்களுக்கிடையில் ஊற மக்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இறைவன் கைலாசநாதர் சிறிய வடிவினராய் நமக்கெலாம் சாயுஜ்ய முக்தி அளிக்க காத்திருக்கிறார். அருகே இறைவி பெரியநாயகி தெற்கு நோக்கியுள்ளார்.
பிரகார தெய்வங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி உள்மண்டபத்தில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன.விநாயகர், முருகன்,தென்முகன், சண்டேசர், சனைச்சரன் என வரிசையாய் வைத்துள்ளனர். வெளியில் கருவறை கோட்ட தெய்வங்கள் ஏதுமில்லை. வடகிழக்கில் நவகிரகங்கள் உள்ளன.
குருக்கள் வீடு கோயில் வாயிலிலேயே உள்ளது.
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget