கும்பகோணத்தின் மேற்கில் 25கிமி தூரத்தில் உள்ளது அய்யம்பேட்டை இந்த ஊரை
சுற்றி சப்தமாதர்கள் எனப்படும் எழுவரும் பூசித்த தலங்கள் உள்ளன. அவை
சப்தமங்கை தலங்கள் என அறியப்படுகின்றன.
அதற்க்கு முன் சப்தமங்கையரின் வரலாற்றினை பார்ப்போம்.
சப்த மங்கையர் வரலாறு....
சாமுண்டியாகிய காளியானவள், சண்ட,முண்ட, ரக்தபீஜ அரக்கர்களை வதம் செய்வதற்கு அனைத்து தேவர்களும் உறுதுணையாக இருந்தனர்.
ஒவ்வொருவரிடத்திலிருந்தும் ஒரு சக்தியாக உருவெடுத்தார் அம்பிகை.
பிரமனிடம் தோன்றியவள் நான்கு முகம் கொண்ட பிராமி என்பவள். கைகளில் அக்ஷ
மாலையும் கமண்டலமும் தாங்கியவளாக ஹம்ச வாகனத்தில் அமர்ந்த கோலம்.
மகேசுவரனிடத்தில் தோன்றியவள் மாகேச்வரி. திரிசூலத்தை ஏந்தியும்,சந்திரனைத் தரித்துக் கொண்டும் தோன்றிய கோலம்.
முருக கடவுளின் சக்தியாக வேல் ஏந்தி கௌமாரி தோன்றினர்.
விஷ்ணுவிடம் தோன்றிய சக்தி வைஷ்ணவி, சங்கு -சக்கரம்- கதை ஏந்திய கோலம்.
வராகமூர்த்தியிடம் பன்றிமுகம் கொண்டு வாராகி வெளிவந்தார்.
இந்திரனது சக்தியாக வஜ்ஜிரப்படையுடனும் ஆயிரம் கண்களுடனும் இந்திராணி வெளிவந்தாள்.
எல்லா சக்திகளும் இணைந்தது சாமுண்டியாக உருவெடுத்தார். இவ்வாறு சப்த
கன்னியரும் காளி தேவிக்குத் துணையாக இருந்து போர் புரியச்சென்றனர். அதற்கு
முன்பாக ஒவ்வொருவரும் ஒவ்வோர் தலத்தில் சிவபூஜை செய்து சிவனருள்
பெற்றனர்.அவையே சப்தமங்கைத் தலங்கள்
சக்கரமங்கை ( சக்கரப்பள்ளி ),
அரிமங்கை(ஹரிமங்கை), சூலமங்கை(சூலமங்கலம்), நந்திமங்கை(நல்லிச்சேரி),
பசுபதிமங்கை(பசுபதி கோவில்), தாழமங்கை( தாழமங்கலம் ) மற்றும் ,
திருப்புள்ளமங்கை ஆகிய இந்த ஏழு தலங்களையும், வட திசையிலிருந்து வந்த நாத
சன்மா - அனவித்தை என்ற தம்பதிகள் வழிபட்டுப் பேறு பெற்றனர்.
சப்த
ஸ்தானப் பல்லக்கு விழா: பங்குனி மாதம் சித்திரை நட்சத்திர தினத்தில்
சக்கரப் பள்ளி கோவிலில் இருந்து புஷ்பப் பல்லக்கில் சக்கரவாகீஸ்வரரும் வேத
நாயகியும் எழுந்தருள வெட்டிவேர் பல்லக்கில் நாதசன்மா – அனவித்தை
தம்பதிகளும் தொடருகின்றனர். இப்பல்லக்குகள், புறப்பட்டு சப்த மங்கைகளில்
உள்ள மற்ற ஆறு தலங்களுக்கும் சென்று திரும்புகின்றன.
இப்போது அரியமங்கை தலம் பற்றி பார்ப்போம்.
இத்தலம் ஒரு காலத்தில் நெல்லி வனமாக இருந்தது. அங்கிருந்த அருநெல்லி கனியை
மட்டும் உண்டு, இங்குள்ள சத்திய கங்கை தீர்த்தத்தில் நீராடி, திருமாலை
ஒருகாலத்திலும் பிரியாதிருக்கும் வரம் வேண்டிசிவபிரானைப் பூஜித்து வந்தாள்
மகாலக்ஷ்மி
சப்த மங்கையரில் ஒருவரான மாகேசுவரி வழிபட்ட இத்தலத்தை
பார்வதி தேவி வழிபட்டவுடன், அம்பிகைக்குத் தனது சிரத்தின் உச்சியில் கங்கை
பொங்க அற்புத தரிசனம் காட்டினார் பெருமான். அதுவே தற்போது சத்திய கங்கை
தீர்த்தமாகத் திகழ்கிறது. விஷ்ணுவும் இந்த முர்த்தியை வழிபட்டதால் இங்கு
இறைவனுக்கு அரிமுக்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இறைவி ஞானாம்பிகை தெற்கு
நோக்கி உள்ளார். தனிச் சன்னதியில் வடக்கு நோக்கி ஸ்ரீதேவி- பூதேவி
சமேதராய் பெருமாள் காட்சி தருகிறார். அருகில் ஆயுர் தேவி எனும் பன்னிருகை
தேவி உள்ளார். இறைவிக்கு பின்புறம் உள்ள சன்னதியில் சப்தமாதர் கிழக்கு
நோக்கிய தரிசனம் தருகின்றனர்.
பழமையான ஆலயம் சிதைந்துவிட தற்போது
சிறிய அளவில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அரியமங்கை தலம் செல்வதற்கான வழி
மிகவும் கடினமானதாகவே உள்ளது. கும்பகோணம்சாலை வழி அய்யம்பேட்டை ஊருக்குள்
நுழையும் இடத்தில மதகடி விநாயகர் எனும் கோயில் சாலையின் இடதுபுறம் உள்ளது
அதனை ஒட்டி ஒரு சாலை ரயில் நிலையம் செல்கிறது. ரயிலடிக்கு சற்று முன்னதாக
வலதுபுறம் அஞ்சுமன் திருமண மண்டபம் உள்ளது அதனை ஒட்டி சிறிய சாலை தெற்கு
நோக்கி செல்கிறது அதில் சில நூறு மீட்டர் சென்றால் ரயில் பாதை
குறுக்கிடுகிறது, இந்த ரயில் பாதையின் அருகில் (படத்தில் உள்ள) மதகின் வழி
இறங்கி சற்று தூரம் சென்றால் அரியமங்கை கோயில் அடையலாம். இவ்வூருக்கு
பேருந்து பாதை இல்லை மக்கள் ஒவ்வொரு முறையும் இதுபோன்று பாலம் கடந்தே
செல்கின்றனர்.
மழைக்காலம் வந்தால் அவர்கள் கதி???
அத்தியாவசிய பொருட்கள் கூட ரயில் பாதையை கடந்தே வாங்கி செல்லவேண்டும். நான்
சென்றபோது சிலிண்டர் வண்டி இந்த பக்கம் நின்று ஊருக்குள் போன் செய்ய
மக்கள் தங்களது சிலிண்டரை தூக்கி வந்து மாற்றி செல்லும் பரிதாபம் உள்ளது.
துணை வட்டாச்சியர் ரயில் பாதைமேல் ஒரு வழியமைத்து தந்தால் நன்று