******************** கடம்பூர் கோயில்

Monday, March 25, 2019

முசிறியம் சிவன்கோயில் Musiriyam sivan temple

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் முசிறியம் சிவன்கோயில்

கொரடாச்சேரியில் இருந்து பாண்டவை ஆற்றின் கரையில் கண்கொடுத்த வனிதம் செல்லும் வழியில் நான்கு கிமி தூரத்தில் உள்ளது முசிறியம் கிராமம்.

இங்கு தொடக்கப்பள்ளி அருகில் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது சிவன் கோயிலும் அருகே பெருமாள் கோயிலும்.

பழம்கோயில் சிதைந்த பின்னர் எழுப்பப்பட்டுள்ள சிறிய கோயில் இதுவாகும். கிழக்கு நோக்கிய பெரிய லிங்கம் பெயர் அறிய இயலவில்லை, அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார் இறைவன் கருவறை வாயிலில் சிறிய விநாயகர், மற்றும் முருகன் உள்ளனர். சற்று எதிரில் பைரவரும் சூரியனும் உள்ளனர். நவகிரகங்கள் உள்ளன. ஓர் ஆஞ்சநேயரும் சிவாலயத்தில் உள்ளது.

இறைவன் இறைவி இரு கருவறையையும் இணைக்கிறது ஓர் கான்கிரீட் மண்டபம் இம்மண்டபத்திலேயே ஓர் கிணறும் உள்ளது. கோயிலுக்கு தென்புறம் ஒரு சிறிய குளமும் உள்ளது.

ஆகமவிதிப்படி அமைக்கப்பட்ட கோயில் என தோன்றவில்லை, எனினும் இறைவன் இதையெல்லாம் தாண்டி அன்பாக தம்மை வணங்கவரும் பக்தர்களை காண அனைத்து நெறிமுறைகளையும் தாண்டி வரவேற்க காத்திருக்கிறார்.

#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்.

Sunday, March 24, 2019

Nalil onnu sivan temple- நாலில்ஒன்னு சிவன்கோயில்

ஆன்மாக்கள் பல கோடிப் பிறவிகளில் சேர்த்து வந்துள்ள கர்மங்களை முழுவதுமாய் களைந்து, மீண்டும் பிறவாத நிலையை அடைவது 'முக்தி' என்று குறிக்கப் படுகிறது.
முக்தி வகைகள் நான்கு என்று புராணங்கள் பறை சாற்றுகிறது. சாலோக்கியம், சாயுச்சியம், சாமீப்பியம், சாரூப்பியம்.
சாலோக்கியம்: இறைவனின் உலகத்தை அடைந்து தொண்டு செய்தல்.
சாமீப்பியம்: இறைவனின் உலகத்தை அடைவதோடு அல்லாமல், அருகாமையில் இருந்து தொண்டாற்றும் பேறு.
சாரூப்பியம்: உபாசிக்கும் இறை வடிவத்தின் திருவுருவத்தையும் இறைச் சின்னங்களையும் பெற்று, இறைவனுக்கு தொண்டு செய்தல். (சில உதாரணங்கள்: திரிசூலம், சங்கு, சக்கரம், சக்தி வேல், நெற்றிக் கண்கள்).
சாயுச்சியம்: இறைவனோடு ஒன்று படுதல். ஜீவாத்ம - பரமாத்ம ஐக்கிய நிலையை குறிப்பது
இதோ கொரடாச்சேரி அருகில் உள்ள நாலில்ஒன்னு சிவனை தரிசிக்க முடிந்தோர்க்கு இந்த நாலில்ஒன்று கிடைக்கும். இதுவே ஊரின் பெயராகவும் ஆனது.
கொரடாச்சேரியில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் வெண்ணாறு கரையில் கண்கொடுத்த வனிதம் சாலையில் இரண்டு கிமி தூரம் சென்றால் நாலில்ஒன்று கிராமத்தினை அடையலாம். சிறிய அழகான பசுமை போர்வை போர்த்திய வயல்களும், தெங்கு மரங்களும் நிறைந்த கிராமம். இங்கு கிழக்கு நோக்கிய சிவாலயம் அமைந்துள்ளது.
முற்காலத்தில் அழகிய சிவாலயமாக இருந்த இக் கைலாசநாதர் கோயில் இடைக்காலத்தில் சிதைந்து போயிருந்ததை சிரமங்களுக்கிடையில் ஊற மக்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இறைவன் கைலாசநாதர் சிறிய வடிவினராய் நமக்கெலாம் சாயுஜ்ய முக்தி அளிக்க காத்திருக்கிறார். அருகே இறைவி பெரியநாயகி தெற்கு நோக்கியுள்ளார்.
பிரகார தெய்வங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி உள்மண்டபத்தில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன.விநாயகர், முருகன்,தென்முகன், சண்டேசர், சனைச்சரன் என வரிசையாய் வைத்துள்ளனர். வெளியில் கருவறை கோட்ட தெய்வங்கள் ஏதுமில்லை. வடகிழக்கில் நவகிரகங்கள் உள்ளன.
குருக்கள் வீடு கோயில் வாயிலிலேயே உள்ளது.
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்.

Thursday, June 7, 2018

பாபநாசம் வட்டம், அரியமங்கை சிவன்கோயில்
கும்பகோணத்தின் மேற்கில் 25கிமி தூரத்தில் உள்ளது அய்யம்பேட்டை இந்த ஊரை சுற்றி சப்தமாதர்கள் எனப்படும் எழுவரும் பூசித்த தலங்கள் உள்ளன. அவை சப்தமங்கை தலங்கள் என அறியப்படுகின்றன.
அதற்க்கு முன் சப்தமங்கையரின் வரலாற்றினை பார்ப்போம்.
சப்த மங்கையர் வரலாறு....
சாமுண்டியாகிய காளியானவள், சண்ட,முண்ட, ரக்தபீஜ அரக்கர்களை வதம் செய்வதற்கு அனைத்து தேவர்களும் உறுதுணையாக இருந்தனர்.
ஒவ்வொருவரிடத்திலிருந்தும் ஒரு சக்தியாக உருவெடுத்தார் அம்பிகை.
பிரமனிடம் தோன்றியவள் நான்கு முகம் கொண்ட பிராமி என்பவள். கைகளில் அக்ஷ மாலையும் கமண்டலமும் தாங்கியவளாக ஹம்ச வாகனத்தில் அமர்ந்த கோலம்.
மகேசுவரனிடத்தில் தோன்றியவள் மாகேச்வரி. திரிசூலத்தை ஏந்தியும்,சந்திரனைத் தரித்துக் கொண்டும் தோன்றிய கோலம்.
முருக கடவுளின் சக்தியாக வேல் ஏந்தி கௌமாரி தோன்றினர்.
விஷ்ணுவிடம் தோன்றிய சக்தி வைஷ்ணவி, சங்கு -சக்கரம்- கதை ஏந்திய கோலம்.
வராகமூர்த்தியிடம் பன்றிமுகம் கொண்டு வாராகி வெளிவந்தார்.
இந்திரனது சக்தியாக வஜ்ஜிரப்படையுடனும் ஆயிரம் கண்களுடனும் இந்திராணி வெளிவந்தாள்.
எல்லா சக்திகளும் இணைந்தது சாமுண்டியாக உருவெடுத்தார். இவ்வாறு சப்த கன்னியரும் காளி தேவிக்குத் துணையாக இருந்து போர் புரியச்சென்றனர். அதற்கு முன்பாக ஒவ்வொருவரும் ஒவ்வோர் தலத்தில் சிவபூஜை செய்து சிவனருள் பெற்றனர்.அவையே சப்தமங்கைத் தலங்கள்
சக்கரமங்கை ( சக்கரப்பள்ளி ), அரிமங்கை(ஹரிமங்கை), சூலமங்கை(சூலமங்கலம்), நந்திமங்கை(நல்லிச்சேரி), பசுபதிமங்கை(பசுபதி கோவில்), தாழமங்கை( தாழமங்கலம் ) மற்றும் , திருப்புள்ளமங்கை ஆகிய இந்த ஏழு தலங்களையும், வட திசையிலிருந்து வந்த நாத சன்மா - அனவித்தை என்ற தம்பதிகள் வழிபட்டுப் பேறு பெற்றனர்.
சப்த ஸ்தானப் பல்லக்கு விழா: பங்குனி மாதம் சித்திரை நட்சத்திர தினத்தில் சக்கரப் பள்ளி கோவிலில் இருந்து புஷ்பப் பல்லக்கில் சக்கரவாகீஸ்வரரும் வேத நாயகியும் எழுந்தருள வெட்டிவேர் பல்லக்கில் நாதசன்மா – அனவித்தை தம்பதிகளும் தொடருகின்றனர். இப்பல்லக்குகள், புறப்பட்டு சப்த மங்கைகளில் உள்ள மற்ற ஆறு தலங்களுக்கும் சென்று திரும்புகின்றன.
இப்போது அரியமங்கை தலம் பற்றி பார்ப்போம்.
இத்தலம் ஒரு காலத்தில் நெல்லி வனமாக இருந்தது. அங்கிருந்த அருநெல்லி கனியை மட்டும் உண்டு, இங்குள்ள சத்திய கங்கை தீர்த்தத்தில் நீராடி, திருமாலை ஒருகாலத்திலும் பிரியாதிருக்கும் வரம் வேண்டிசிவபிரானைப் பூஜித்து வந்தாள் மகாலக்ஷ்மி
சப்த மங்கையரில் ஒருவரான மாகேசுவரி வழிபட்ட இத்தலத்தை பார்வதி தேவி வழிபட்டவுடன், அம்பிகைக்குத் தனது சிரத்தின் உச்சியில் கங்கை பொங்க அற்புத தரிசனம் காட்டினார் பெருமான். அதுவே தற்போது சத்திய கங்கை தீர்த்தமாகத் திகழ்கிறது. விஷ்ணுவும் இந்த முர்த்தியை வழிபட்டதால் இங்கு இறைவனுக்கு அரிமுக்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இறைவி ஞானாம்பிகை தெற்கு நோக்கி உள்ளார். தனிச் சன்னதியில் வடக்கு நோக்கி ஸ்ரீதேவி- பூதேவி சமேதராய் பெருமாள் காட்சி தருகிறார். அருகில் ஆயுர் தேவி எனும் பன்னிருகை தேவி உள்ளார். இறைவிக்கு பின்புறம் உள்ள சன்னதியில் சப்தமாதர் கிழக்கு நோக்கிய தரிசனம் தருகின்றனர்.
பழமையான ஆலயம் சிதைந்துவிட தற்போது சிறிய அளவில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அரியமங்கை தலம் செல்வதற்கான வழி மிகவும் கடினமானதாகவே உள்ளது. கும்பகோணம்சாலை வழி அய்யம்பேட்டை ஊருக்குள் நுழையும் இடத்தில மதகடி விநாயகர் எனும் கோயில் சாலையின் இடதுபுறம் உள்ளது அதனை ஒட்டி ஒரு சாலை ரயில் நிலையம் செல்கிறது. ரயிலடிக்கு சற்று முன்னதாக வலதுபுறம் அஞ்சுமன் திருமண மண்டபம் உள்ளது அதனை ஒட்டி சிறிய சாலை தெற்கு நோக்கி செல்கிறது அதில் சில நூறு மீட்டர் சென்றால் ரயில் பாதை குறுக்கிடுகிறது, இந்த ரயில் பாதையின் அருகில் (படத்தில் உள்ள) மதகின் வழி இறங்கி சற்று தூரம் சென்றால் அரியமங்கை கோயில் அடையலாம். இவ்வூருக்கு பேருந்து பாதை இல்லை மக்கள் ஒவ்வொரு முறையும் இதுபோன்று பாலம் கடந்தே செல்கின்றனர்.
மழைக்காலம் வந்தால் அவர்கள் கதி???
அத்தியாவசிய பொருட்கள் கூட ரயில் பாதையை கடந்தே வாங்கி செல்லவேண்டும். நான் சென்றபோது சிலிண்டர் வண்டி இந்த பக்கம் நின்று ஊருக்குள் போன் செய்ய மக்கள் தங்களது சிலிண்டரை தூக்கி வந்து மாற்றி செல்லும் பரிதாபம் உள்ளது. துணை வட்டாச்சியர் ரயில் பாதைமேல் ஒரு வழியமைத்து தந்தால் நன்று

Tuesday, August 16, 2016

சுந்தரர் முக்தி நாள் பூசை

சுந்தரர் மற்றும் பரவை நாச்சியாருக்கும் சிறப்பு திருநீராட்டல் நடத்தபெற்று தீபாராதனை நடந்தேறின. இதனை காட்டுமன்னார்கோயில் திரு.சண்முகம் அவர்கள் நடத்தி மகிழ்ந்தார்கள்

Thursday, March 17, 2016

கடம்பூர் கோயிலில் கதிரவன் வழிபாடு கடம்பூர் கோயிலில் பங்குனி 3,4,5 ஆகிய தேதிகளில்காலை உதயமாகும் சூரியனின் ஒளிக்கதிர்கள் இறைவன் அருள்மிகு அமிர்தகடேசுவரர் மீது வீழ்ந்து ஜோதிமயமாய் காட்சியளிக்க செய்யும்.
இதன் முதல் நாளான பங்குனி 3அன்று தெரிந்த காட்சிகள் இங்கே..

இன்றைய மண்டகப்படியின் உபயதாரர் திரு.மாசிலாமணி காட்டுமன்னர்கோயில்

Friday, August 28, 2015

கடம்பூர் கோயிலில் ஆடல்வல்லானுக்கு ஆவணி மாத திருநீராட்டல்


சிவன் நீராட்டுப் பிரியன் என்பது ஊரறிந்த விஷயம். அதிலும் நடராஜருக்கு அபிஷேகம் என்பது ஆனந்தத் தாண்டவம்தான். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடப்பது போன்று அதே நாளில் அனேக சிவன் கோயில்களில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். கடம்பூர் திருக்கோயிலிலும் நேற்று ஆவணி மாத திருநீராட்டல் நடைபெற்றது. காட்டுமன்னார்கோயில் சொர்ணம் ஜவுளிக்கடை உரிமையாளர்-திரு.அன்பழகன் அவர்கள் உபயமாக நடைபெற்றது.
அவரது மகன் திரு அறிவழகன் Arivazhagan Anbazhagan அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டார்.


Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget