******************** கடம்பூர் கோயில்: கடம்பூர் கோயிலில் அன்னவார்ப்பு திருநாள்

Monday, October 29, 2012

கடம்பூர் கோயிலில் அன்னவார்ப்பு திருநாள்

 அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலத்தின் தென்மேற்கில் பத்து காத தூரத்தில் (ஒரு காதம்- 3.35கி.மீ) உள்ளது அப்பரும், ஞானசம்பந்த பிள்ளையும் பதிகம் பாடி அருளிய திருக்கடம்பூர் எனும் மேலக்கடம்பூர்.
 முதலாம் குலோத்துங்கனால் தேர்வடிவ கோயிலாக சிற்ப கலை சிறப்புடன் உருவாக்கப்பட்ட கருங்கற்கோயில் . மூவேளை பூசனையுடன் அனைத்து பட்ச,மாத விழாக்களும் தவறாமல் நடந்தேறும் திருக்கோயில்.



 ஐப்பசி மாத முழுநிலவு நாளில் எம்பெருமானுக்கு அன்னம் எனும் வெண் பச்சரிசியை வேகவைத்து இளஞ் சூட்டில் எடுத்து வெள்ளித்தகடென
திருமேனியை போர்த்தி வேகவைத்த காய்கறி கொண்டு ஒப்பனை செய்து , உலகத்து உயிர்க்கெலாம் படியளக்கும் ஐயனை நம் கையினால் விளைந்த பொருள் கொண்டு போற்றும் திருநாள் அதுவே அன்னவார்ப்பு திருநாள்.
 வேக வைத்த புடலங்காயை  நாகமென வைத்திட கொண்டுவருபவர் திருக்கோயில் தலைமை குருக்கள் திரு.செல்வகணேசகுருக்கள்

 அன்னவார்ப்பு நிறைவடைந்து பின் பூ மாலை , பா மாலை சாற்றி பூசனைகள் நடந்தேறின.




 அம்மைபெயர்  - சோதி மின்னம்மை  சோதி என்பது பொது நிலையில் ஒளியை குறிக்கும், இதுவே யோக அனுபவத்தில் காணும் இறையாற்றலாகிய பேரொளியை குறிக்கும். பக்தி இலக்கியத்தில் திருமூலர், சைவ குரவர் நால்வர், தாயுமானவர் , வள்ளலார் முதலியோர் சோதி  என்ற சொல்லை இப் பொருளிலேயே கையாண்டனர்.திருவாசகத்தில் குறிப்பிடப்படுவது போல் " சோதியே சுடரே சூழொளி விளக்கே" எனஅப்பனை குறிப்பது அம்மைக்கும் பொருந்துமல்லவா

 உபயதாரர் திரு.நாகரத்தினம்  குடும்பத்தினர்.



 தீபாராதனை முடிந்து அன்னம் அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருமேனி மற்றும் இந்திரன் பாபம் போக்கியருளிய குற்றம்  போக்கியநாதர் (பாபஹரேசுவரர்), கடம்ப நாதர் மீதிருந்து எடுக்கப்பட்டு ஓர் தட்டில் வைக்கப்பட்டு சிவபுராண  பாடலுடன் திருக்கோயில் திருவீதி வலம் வந்து திருக்கோயிலின் சிவதீர்த்தத்தில் கரைக்கப்பட்டது

 அன்னம் அகற்றி திரு நீராட்டி மாலை சூட  செய்து ஐங்கிளை ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

சீர் வளர் கோயில் அணைந்து தேமலர்க்
கார்வளர் கண்டார்கள் பணிந்து காண்பவர்
 பார்புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார்பொழிற் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்
                                                                               -சேக்கிழார்

அன்னார் கூறியபடி கடம்பூரினை வணங்கிட வாரீர். "கடம்பூர் மேவிய விடங்கா போற்றி அடைந்தவர்க்கருளும் அப்பா போற்றி"
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget